தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த கோர விபத்து | Tenkasi | Kadayanallur | SchoolAccident தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிந்தாமணி என்கிற பகுதியில் தனியார் பள்ளி இயங்குகிறது. 5 வயதுள்ள சிவயாழினி என்கிற பெண் குழந்தை இந்தப் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இன்று பள்ளி முடிந்து சிவயாழினி வெளியில் வரும்பொழுது பள்ளிக்குள் ஒரு கார் உள்ளே சென்றபோது எதிர்பாராத விதமாக குழந்தை மீது கார் வேகமாக மோதியது. பலத்த காயம் அடைந்த சிவயாழினி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களும் பள்ளிக்கு வந்து குழந்தையை பார்த்து கதறி அழுதனர். போலீசாரும் அங்கு வந்து குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிவயாழினியின் பெற்றோர் செய்வது அறியாமல் தவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் கொல்லம் - திருமங்கலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், பள்ளி வளாகத்துக்குள் வந்த காரில் இருந்தது யார் யார் என்பதை சிசிடிவி காட்சிகளை வைத்து கண்டறிந்த பிறகு, உரிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். பள்ளி உரிமையாளரின் மகன்தான் காரை ஓட்டி வந்துள்ளார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் அந்த பள்ளியைச் சேர்ந்த டிரைவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026