தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி பங்கீட்டின்போது, தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார். பின், ஏ.சி.சண்முகம் கூறுகையில், எங்கள் கட்சிக்கு, மதுரை மத்தி தொகுதியை, அ.தி.மு.க., வழங்கியுள்ளது. அந்த தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இதுபோல, தே.ஜ., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டதில் இருந்து, ஒரு தொகுதியை எங்களுக்கு கொடுக்கின்றனர். அது எந்த தொகுதி என இன்னும் முடிவாகவில்லை. அந்த தொகுதியில், தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். வேட்பாளர்களை விரைவில் அறிவிப்போம்; நான் போட்டியிடவில்லை, என்றார். தமிழக தேர்தல் வரலாற்றில், ஒரு கட்சி, தான் சார்ந்துள்ள கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளின் இருவேறு சின்னங்களில் போட்டியிடுவது, இதுவே முதல்முறை. புதிய நீதிக்கட்சிக்கு அ.தி.மு.க., ஒதுக்கியுள்ள மதுரை மத்திய தொகுதி, தற்போதைய தி.மு.க., அமைச்சர் தியாகராஜன், கடந்த 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்ற தொகுதி. ஏற்கனவே, சபாநாயகர் அப்பாவு மற்றும் 20க்கும் மேற்பட்ட தி.மு.க., அமைச்சர்களின் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய அ.தி.மு.க., தற்போது, புதிய நீதிக்கட்சிக்கும் அமைச்சர் தொகுதியை தள்ளிவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026